முதலமைச்சர் விஜய்
தமிழக செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் முதலமைச்சர் விஜய்

மதுரை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

மதியம் அவுட்போஸ்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய் மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன்பின் மாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டார்.

பூரண கும்ப மரியாதை

கோரிப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண், ஜடாமுனி கோவில் தெரு வழியாக 6 கி.மீ. பயணம் செய்து மீனாட்சி அம்மன்கோவில் கிழக்கு நுழைவு வாயிலை அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டார். அவர் நடந்து வந்தபோது பொதுமக்கள் இரு பக்கங்களிலும் நின்று அமோக வரவேற்பு அளித்தனர்.

அண்மையில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மீனாட்சி அம்மன் கோவில் புதுபொலிவுடன் காட்சி அளிக்கிறது. கோவிலுக்குள் சென்ற முதல்-அமைச்சர் விஜய் பொற்றாமரை குளம், அம்மன், சுவாமி சன்னதி பிரகாரங்கள், புதிதாக புனரமைக்கப்பட்ட வீரவசந்த ராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவற்றைகளை பார்வையிட்டார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் அம்மனுக்கு 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பூஜையின் போதும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு பூஜையிலும் தரிசனம் செய்யும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சுமார் அரைமணி நேரம் தரிசனம்

இன்று மாலை கோவிலுக்கு வரும் முதல்-அமைச்சர் விஜய் 4.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தார். இந்த பூஜையின்போது பஞ்ச தசி வடிவத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார். அப்போது அம்மனை வழி பட்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 30 நிமிடம் அம்மன், சுவாமி சன்னதிகளில் முதல்-அமைச்சர் விஜய் வழிபட்டார். சுமார் 4.30 மணிக்கு கோவிலுக்குள் சென்ற முதலமைச்சர் விஜய், 5 மணிக்கு சாமி தரிசனம் முடித்து வெளியே வந்தார்.

கடந்த 17-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்கான அவர் அப்போது பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தற்போது சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

SCROLL FOR NEXT