தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் வீழ்த்தி முதலமைச்சர் ஆகியுள்ள விஜய் த.வெ.க. ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளித்து உள்ள கட்சிகளோடு இணைந்து கூட்டணி அமைச்சரவையை உருவாக்கி உள்ளார்.
கடந்த 10-ந்தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது கூடுதலாக 23 அமைச்சர்களுக்கு கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுடன் த.வெ.க.வை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்கள் ஆனார்கள்.
இந்த நிலையில் 2-வது முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரசை போன்று தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் தமிழக அமைச்சரவையில் பிரதி நிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான வன்னி அரசு திண்டிவனம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் இன்று கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்த தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.எம்.ஷாஜகானுக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் அவருக்கும் கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கான விழா இன்று காலை 9.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்யை தலைமை செயலாளர் சாய்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் கவர்னர் அர்லேகர் பதவியேற்பு மேடைக்கு வந்தார் அவரை முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.
இதன் பின்னர் புதிய அமைச்சர்கள் இருவருக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தங்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளில் 3 கட்சிகளுக்கு விஜய் அமைச்சர் பதவி வழங்கி இருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ஏற்கனவே விஜய்யுடன் சேர்த்து முதலில் 10 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். இதன்பிறகு நேற்று 23 பேர் பதவியேற்றதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 33 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று வன்னி அரசு, ஷாஜகான் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்கள் பதவியேற்று இருப்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டமன்றத்தில் 35 பேர் வரை அமைச்சர்களாக முடியும். முதலமைச்சர் விஜய் அடுத்தடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்து 35 அமைச்சர்களையும் பதவியேற்க செய்துள்ளார். இதன் மூலம் தமிழக சட்டசபையில் முழுமையான கூட்டணி அமைச்சரவை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி ஆட்சி கோஷத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அந்த கட்சியின் எண்ணம் தற்போது நிறைவேறி இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 கட்சிகளும் முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் பங்கேற்று உள்ளன.