முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே மாதம் 13-ந்தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். மொத்தம் 144 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வாக்கெடுப்புக்கு பின்னர் பெரும்பான்மை உறுதியானதை தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு (18-ந்தேதி) தொடங்க இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் தமிழக கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார்.
இதற்காக கவர்னர் அர்லேகர் நாளை காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வருகிறார். அவரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் வரவேற்கின்றனர். சட்டசபை கூட்ட அரங்குக்கு கவர்னர் அர்லேகர் வந்ததும் 10 மணிக்கு சபை நடவடிக்கைகள் தொடங்குகிறது.
அப்போது அரசின் சார்பில் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள உரையை கவர்னர் அர்லேகர் வாசிப்பார். ஆங்கிலத்தில் இடம் பெறும் அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது. அதன் பிறகு கவர்னரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசிப்பார். அத்துடன் நாளைய நிகழ்ச்சிகள் முடிவடையும்.
அதன் பிறகு அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும்.