தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி.
* ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும்.
* வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை.
* நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.
* 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்திவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
* அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.
* பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்.
* தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்.
* தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
* ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும்.
* பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.
* மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.
* ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 5 முதல் 7% வரை உள்ளதால் காலி பணியிடம் அதிகரித்துள்ளது. விரைந்து செயல்பட்டால்தான் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும். அனைத்து குக்கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளையும் ஏ.சி. பேருந்துகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் கூறி உள்ளார்.
* ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி கண்டமான பேருந்துகளை ஒதுக்கிவைத்து விட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். தற்போது 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகளுக்கு மாற்று பேருந்துகள் வாங்குவது ஐந்து வருடத்தில் இயலாத காரியம்.
* நெல், கரும்புக்கு தவெக அரசு அறிவித்த ஊக்கத்தொகை போதாது.
* அ.தி.மு.க. அரசு இருந்தபோது 2 முறை விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். இப்போது விவசாயிகள் காத்திருக்கின்றனர்
* தவெக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
* வறட்சியால் தவிக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
* அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
* விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.
* தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும்.
* சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.