தமிழக செய்திகள்

TN Assembly Elections: 234 தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் யார்? மார்ச் 29-இல் அறிமுகம் செய்யும் விஜய்

சட்டமன்ற தேர்தலை ஒட்டி வருகிற மார்ச் 29-ஆம் தேதி த.வெ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. நாம் தமிழர், அ.தி.மு.க. என சில அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன.

தற்போதைய சூழ்நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என தற்போதைய சூழலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் அறிமுக கூட்டம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் என் ஆனந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில், "தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகள் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

SCROLL FOR NEXT