தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குழு தலைவருமான டி.எஸ். சிங் தியோ தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.சி சந்திரசேகர், அனில்குமார் யாதவ் மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான நிவேதித் ஆல்வா, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர்கள் கே. எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய்வசந்த், கார்த்திக் சிதம்பரம், மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர்கள் மயூரா ஜெயக்குமார், விஸ்வநாதன், அறிவழகன், கோபிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம் நாச்சியப்பன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகளுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இக்குழு ஆலோசனை நடத்தியது.