தமிழக செய்திகள்

TN Assembly Election| சென்னையில் இறுதிகட்ட பிரசாரம்: நந்தனத்தில் 21-ந்தேதி விஜய் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சில நாட்களாகவே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இதுவரை திருச்சி, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை தி.நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவர் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

விஜய் பிரசாரம் செய்த போது வழி நெடுக ஏராளமான தொண்டர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் பிரசாரம் செய்ய சென்ற அனைத்து இடங்களிலுமே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் விஜய் நாளை (18-ந்தேதி) கடலூர், தர்மபுரி ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக விஜய் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு முதலில் கடலூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து வேன் மூலம் கடலூர் தொகுதியில் ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்.

கடலூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் தர்மபுரி செல்கிறார். வேன் மூலம் தர்மபுரி தொகுதியில் ‘ரோடு ஷோ’ சென்று தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். பின்னர் அவர் சென்னை திரும்புகிறார்.

அதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி திருவள்ளூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்கிறார். இதற்காக விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காரில் சாலை மார்க்கமாக திருவள்ளூர் செல்கிறார். பின்னர் வேனில் நின்ற படியே திருவள்ளூர் தொகுதியில் ‘ரோடு ஷோ’ சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் சென்னை திரும்புகிறார்.

வருகிற 20-ந்தேதி விஜய் மீண்டும் சென்னையில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அன்று சென்னை வில்லிவாக்கம், பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர், தி.நகர் தொகுதியில் மீண்டும் ஒருமுறை வேட்பாளர் என்.ஆனந்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

வருகிற 21-ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்வதற்கு கடைசி நாள் ஆகும். இறுதி கட்ட பிரசாரமாக சென்னையில் விஜய் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு உள்ளார். அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளரும், தி.நகர் தொகுதி வேட்பாளருமான என்.ஆனந்த் உள்பட 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்களின் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். அத்துடன் விஜய் தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.