தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல்: த.வெ.க. தேர்தல் செலவு ரூ.19.8 கோடி - தி.மு.க.வை விட 10 மடங்கு குறைவு

விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் தலா ரூ.40 லட்சம் செலவிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுவை, அசாம், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் செலவு செய்த கணக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தல்

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுவை, அசாம், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு கட்சியும் செலவு செய்த கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்து தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடும். அதன்படி 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் செலவு செய்த கணக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரூ.19.8 கோடி செலவு

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. ரூ.19.8 கோடி செலவு செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. எந்தெந்த வகைகளில் செலவு செய்யப்பட்டு உள்ளது என்ற விபரம் வருமாறு:-

* முதலமைச்சர் விஜய்யின் விமான பயண செலவு ரூ.3.54 கோடி.

* விளம்பர செலவுகள் ரூ.6.34 கோடி.

* பிரசார பொருட்கள் வாங்கிய வகையில் ரூ.40.54 லட்சம்.

* பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ நிகழ்ச்சிகள் நடத்தியதற்கான செலவு ரூ.2.06 கோடி. பிற பிரசார செலவுகள் ரூ.27.04 கோடி.

* தேர்தலுக்காக கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடி.

* விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் தலா ரூ.40 லட்சம் செலவிடப்பட்டுள்ளன.

அதே நேரம் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆன்லைன் பிரசாரத்துக்கு எந்த பணமும் செலவு செய்யவில்லை. அதே நேரம் கட்சியின் பொது பிரசார செலவில் பெரும் பகுதியாக ரூ.26.35 கோடி பத்திரிகை, டிஜிட்டல் மீடியா மற்றும் ரேடியோ உள்ளிட்டவற்றில் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கட்சியில் கையிருப்பு ரூ.3.03 கோடியாக இருந்தன. கட்சிக்கு கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடியாக இருந்தன.

10 மடங்கு குறைவு

த.வெ.க.வின் செலவு தி.மு.க. செலவு செய்ததில் 10 மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. ரூ.198 கோடி செலவிட்டுள்ளது. அடுத்ததாக அ.தி.மு.க. ரூ.112 கோடி செலவு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பல்வேறு வகைகளில் ரூ.2.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.93.29 லட்சமும், நட்சத்திர பேச்சாளருக்கு ரூ.2.30 லட்சமும், பயண செலவு, விளம்பர செலவு உள்பட மொத்தம் ரூ.1.37 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT