தமிழக செய்திகள்

TN Assembly Election| விஜய் தலைமையில் இன்று நடைபெற இருந்த த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ரத்து

வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் முடிவை கைவிட்டு சென்னையிலேயே உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுதாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்படைந்து உள்ளது.

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்து விட்டது. அ.தி.மு.க.வில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகி விட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்க வேண்டி உள்ளது. அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். வருகிற 2-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. இதனால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

விருப்பமனு கொடுத்தவர்களிடம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியல் விஜய்யின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பட்டியலுக்கு விஜய் ஒப்புதல் கொடுத்தார்.

இதையடுத்து த.வெ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வையும், வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியையும் ஒன்றாக நடத்த விஜய் திட்டமிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்குமாறு, தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டது. விஜய் தலைமையில் இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற இருந்த நிலையில் வெளியூர்களை சேர்ந்த வேட்பாளர்கள் பெரும்பாலானோர் நேற்றே சென்னைக்கு வந்து விட்டனர். அவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலையில் சென்னைக்கு வர திட்டமிட்டு இருந்தனர்.

இதற்கிடையே வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ், தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டது. போலீஸ் அனுமதி கிடைத்த நிலையில் இதற்காக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அனுமதி பெறுவதற்காக நேற்று இரவு வரை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால் நேற்று இரவு வரை அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து இன்று காலையிலும் த.வெ.க. நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று அனுமதிக்காக காத்திருந்தனர். ஆனால் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காத நிலையில் வருகிற 29-ந்தேதிக்கு த.வெ.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் அறிமுக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை மட்டும் இன்று வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த முடிவும் கைவிடப்பட்டது.

வருகிற 29-ந்தேதியே வேட்பாளர் பட்டியலை வெளியிடும் நிகழ்வையும், வேட்பாளர் அறிமுக கூட்டத்தையும் ஒன்றாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 29-ந்தேதி நடக்கும் வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்துள்ள த.வெ.க. வேட்பாளர்கள் தொடர்ந்து சென்னையிலேயே தங்கியுள்ளனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் முடிவை கைவிட்டு சென்னையிலேயே உள்ளனர்.

இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய் நாளை (28-ந்தேதி) தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தார். பெரம்பூர் தொகுதியில் இருந்து அவர் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார். இதற்கும் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் பிரசாரத்துக்கும் தேர்தல் ஆணையம் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.

இதுகுறித்து த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-

த.வெ.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலின் உள்ளரங்கத்தில் இன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணைய செயலியில் அனுமதி பெறுமாறு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் தேர்தல் ஆணைய செயலியில் தெருமுனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி கேட்கும் வசதி உள்ளது. உள்ளரங்கத்தில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் வசதி இல்லை.

எனவே இதற்கு முறைப்படி அனுமதி கேட்டு ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றோம். நேற்று காலை 6 மணிக்கே சென்று காத்திருந்தோம். ஆனால் அங்கு தேர்தல் அதிகாரி இல்லை.

இதையடுத்து தொடர்ந்து அங்கேயே காத்திருந்தோம். மாலையில் தான் தேர்தல் அதிகாரி அங்கு வந்தார். அவரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் அவர் செயலி மூலம் அனுமதி பெறுமாறு கூறி விட்டார். நேற்று நள்ளிரவு வரை போராடியும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்த அனுமதி கிடைக்கவில்லை.

தலைவர் விஜய் கலந்து கொள்ளும் கூட்டம் மற்றும் த.வெ.க. நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறுவதற்காக இதுவரை தி.மு.க. அரசிடம் போராடி வந்தோம். இப்போது தேர்தல் ஆணையத்தில் போராட வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.