தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4. மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று, அக்கட்சியின் அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடந்தது. அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தி.மு.க.விடம் கண்டிப்பாக கடந்த முறை பெற்ற 6 தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதியை அதாவது 7 தொகுதியை கேட்டு பெற வேண்டும். இல்லையென்றால் 6 தொகுதிகளையாவது பெற்றிட வேண்டும். அதற்கு கீழ் கண்டிப்பாக தொகுதிகளை பெறக்கூடாது என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மார்க்சிஸ்ட் மாநில குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வது என முடிவெடுத்ததாகவும், தொகுதிகளின் எண்ணிக்கை விவகாரத்தில் விட்டு கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.