தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குப்பதிவு

அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 75.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 3,25,79,329 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.

விழுப்புரம் 71.65, சேலம் 75.79, நெல்லை 62.84, திருவள்ளூர் 68.07, நீலகிரி 63.67, செங்கல்பட்டு 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் 68.13 சதவீத வாக்குள் பதிவாகியுள்ளன. மொத்தம் 4.01 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.