தமிழக செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை

எங்களுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இன்றைய சட்டசபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்க இருப்பதை ஒட்டி சபையில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துவிட்டார். இந்த நிலையில், அரசினர் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு:

இதுவரை 18 நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு ஆட்சியமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் சூட்டலாம்.

கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

முதலமைச்சர் பதிலுரை:

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன்.தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும்.

எல்லாவற்றிற்கும் தெளிவான பதில் சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT