கொலையுண்ட பவித்ரன் 
தமிழக செய்திகள்

திருவொற்றியூர் மருந்து விற்பனை பிரதிநிதி கொலையில் ஒருவர் கைது

மது போதை தகராறில் பவித்ரன் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பாலாஜி மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளது.

திருவொற்றியூர்,டி.எச்.ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பவித்ரன் (வயது 32). மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு பவித்ரன் தனது நண்பர்களுடன் திருவொற்றியூர், வன்னியர் தெருவில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக ெதரிகிறது. அப்போது அருகில் மற்றொரு தரப்பினர் கஞ்சா போதையில் சத்தமாக பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

கொலை

இதனை பவித்ரன் கண்டித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பு கும்பல் கத்தியால் பவித்ரனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பவித்ரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை தடுக்க முயன்ற பவித்ரனின் நண்பரான மதன் என்பவருக்கு வலது கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து பவித்ரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இந்த கொலை தொடர்பாக திருவொற்றியூர், வன்னியர் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பாலாஜி மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசார் விசாரணை

மேலும் கொலையில் தொடர்புடைய ஹரி, கிஷோர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கொலையுண்ட பவித்ரன் ஏற்கனவே வன்னியர் தெருவில் வசித்து வந்து உள்ளார். அப்போது தெரு நாய்களுக்கு உணவு வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் வீட்டை காலி செய்து விட்டு தற்போது வசிக்கும் பகுதிக்கு வந்து உள்ளார்.

எனவே இந்த தகராறின் தொடர்ச்சியாக கொலை நடந்ததா? அல்லது மது போதை தகராறில் பவித்ரன் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT