தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே நகை திருடிய வழக்கில் கணவன்-மனைவி கைது

போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது தனது கணவர் முகமது ஆசிப்புடன் சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் ரோஜா தெருவில் தனியாக வசித்து வருபவர் தங்கராசு. கடந்த 11-ந் தேதி இவரது வீட்டில் 6¼ பவுன் நகை கொள்ளை போனது.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதியவர் வீட்டை விட்டு எங்கும் செல்லாத நிலையில் கதவு, பீரோ உடைக்காமல் வீட்டில் இருந்த நகைகள் திருடு போய் இருந்தது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையை ஆய்வு செய்தபோது முதியவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும ஷபானா என்பவரது கைரேகை பதிவாகி இருந்தது.

இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது தனது கணவர் முகமது ஆசிப்புடன் சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

திருட்டு

வீட்டில் தனியாக இருக்கும் முதியவர் தங்கராசுக்கு ஷபானா சமையல் செய்து கொடுத்து வந்து உள்ளார். இந்தநிலையில் முதியவர் தங்கராசு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நைசாக பீரோவை திறந்து அதில் இருந்த நகையை கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து ஷபானா, அவரது கணவர் முகமது ஆசிப் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த நகையை விற்று அவர்கள் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து 11 கிராம் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT