யுவராஜ்-மஞ்சுளா. 
தமிழக செய்திகள்

குடும்ப தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

திருவள்ளூர் அருகே கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். (வயது29). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு காதலர் தினம் அன்று திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் யுவராஜூக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் மதுகுடித்து வீட்டிற்கு வந்ததால் யுவராஜை மனைவி கண்டித்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் அதிகமானது.

வாக்குவாதம்

நேற்று முன்தினம் வழக்கம் போல் யுவராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை மனைவி மஞ்சுளா கண்டித்ததால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது யுவராஜ், மனைவி மஞ்சுளாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த மஞ்சுளா வீட்டில் இருந்த கொக்குமருந்து விஷத்தை குடித்தார். இதனை கண்ட யுவராஜ் நானும் சாகிறேன் என்று கூறி மனைவியிடம் மீதம் இருந்த கொக்கு மருந்தை அவரும் குடித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு

இதில் கணவன்-மனைவி இருவரும் உயிருக்கு போராடினர். அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சைப் பலனின்றி யுவராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கினர்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்ற–னர். கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி–யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT