கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம். 
தமிழக செய்திகள்

திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கியிருந்த 9 வங்காளதேசத்தினர் கைது

போலி ஆவணங்களை காட்டி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் திருமுருகன் பூண்டி மற்றும் நல்லூர் பகுதிகளில் சட்டவி ரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக திருப்பூர் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நல்லூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில், 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பது தெரிந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த பரிதுல் இஸ்லாம் (24), ரிடாய் ஹூசைன் ரபாத் (23 ), சிமுல் ரஹ்மான்(27), மற்றும் ரேகான் (26) என்பது தெரிந்தது.

நான்கு பேரும் போலி ஆவணங்களை காட்டி முத்தணம்பாளையத்தில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது. நான்கு பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், திருமுருகன்பூண்டியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது மஹத்அசன் (26), முகமது கமல்(43), அபிப், (29), பரீத், (26), முகமத் நஜ்ரூல் இஸ்லாத், (24) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் இருந்து போலியான ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது அனைவரும் மேற்கு வங்காளத்தில் உள்ள கும்பலிடம் போலியான முகவரி கொடுத்து ஆதார் அட்டையை தயார் செய்து திருப்பூரில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.  இதனிடையே தனிப்படை போலீசார் மாநகர் முழுவதும் வேறுயாராவது இதேபோல் முறைகேடாக தங்கியுள்ளனரா?  எனத்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.