திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் வரைவு நகலை கொண்டு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து தவெக அமைச்சரின், இந்த செயல் இணையத்தில் விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “பட்ஜெட் ஆவணங்கள் கடவுளுக்குச் செய்யப்படும் காணிக்கைகளோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல.
அவை, பொதுப் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் அரசியலமைப்பு ஆவணங்கள். ஒரு தனிநபரின் சொந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்த அரசாங்க ஆவணங்களை வழங்குவது முறையற்றது,” என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி. சுந்தரராஜன் கூறுகையில், மரிய வில்சன் பொது பட்ஜெட் ஆவணங்களை ஒரு தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வாரா என்றும் அரசு மதச்சார்பற்றது என்ற உண்மையை மறந்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் வெங்கடேசன் கருத்துக்கு தமிழக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் கோயில் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இவ்வளவு பொங்கும் வெங்கடேசன் அவர்களே, சாமானிய இந்துக்களின் காணிக்கையை, கோயில் பணத்தை ஏன் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்களா?
அவரவர் நம்பிக்கையில் நீங்கள் தலையிடுவது எந்த வகையில் நியாயம்?,” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பதிவிற்கு எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமைச்சரின் வழிபாட்டை இங்கு கேள்விக்கு உட்படுத்தவில்லை. அரசு ஆவணம் பூஜைக்கு உட்படுத்த வேண்டிய பொருளில்லை.
கோயில் பணத்தை அரசாங்கம் எங்கும் எடுக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி திறந்து வைத்த அயோத்தி கோயிலுக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 முறை திருடியிருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் 200 கோடிக்கும் மேல்.
இராமனுக்கு செலுத்தப்பட்ட காணிக்கையை களவாடியவர்கள் குறித்து நேற்றுகூட நாடாளுமன்றத்தின் வாயிலில் போராடிவிட்டு வருகிறேன்.
இராமர் கோயில் திருட்டு குறித்து தேசமே பேசிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இது வரை பேசியதுண்டா?” என்று மருத்துவர் தமிழிசையின் பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.