தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தைவிட உச்சநீதிமன்றத்தின் 'ஈகோ' தான் முதன்மையானதா?- திருமாவளவன் கேள்வி

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!

திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்? என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?

இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா?

சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?

எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?

கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே?

இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?

சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே?

இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT