திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் ஊராட்சி ராமர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கும் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இச்சூழலில் சந்தோஷ்குமார் நேற்று ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பாலசந்தர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 2 பேரும் ஆம்பூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய பாலசந்தர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலசந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து பாலசந்தர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.