பாபநாசம் அணை 
தமிழக செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது

பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மிக கனமழை பெய்து வருவதால் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 619 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 84.40 அடியாக இருந்த இந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 90 அடியை கடந்துள்ளது. தொடர்மழையால் இன்னும் ஓரிரு நாட்களில் அந்த அணை 100 அடியை கடந்து விடும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மணிமுத்தாறு அணை

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 107 அடியை கடந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 7 அடி உயர்ந்து 114 அடியை எட்டியுள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 72 ½ அடியாக இருந்த நிலையில் இன்று 1 அடி உயர்ந்து 73 அடியை கடந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 8-வது நாளாக தடை நீடிக்கிறது. அதேநேரம் அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் களக்காடு தலையணையில் குளிக்கவும், நம்பி கோவில் செல்லவும் தடை நீடிக்கிறது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணையின் நீர்மட்டம் நேற்று 52.80 அடியாக இருந்த நிலையில் தொடர்மழையால் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 56 அடியை கடந்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் இன்று 4 ½ அடி உயர்ந்து 60 ½ அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 48 அடியை கடந்துள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 ½ அடி உயர்ந்து 72½ அடியாக உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.