விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு விதிமுறைகளை மீறி புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை மஞ்சுளாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு பள்ளி கல்வி துறையின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு, முப்பருவ முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது முதற்பருவம் முடிந்து, இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா, முதற்பருவத்தில் மாணவர்கள் படித்து முடித்த புத்தகங்களை மீண்டும் பள்ளிக்கு எடுத்து வருமாறு கூறியுள்ளார். பின்னர் மாணவர்கள் கொண்டு வந்த அந்த புத்தகங்களை, பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி ஒருவரை பள்ளி வளாகத்திற்கே வரவழைத்து, எடைக்கு போட்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கல்வி துறைக்கு புகார் அளித்தனர். அதை தொடர்ந்து திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு விதிமுறைகளை மீறி புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை மஞ்சுளாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.