காதல் விவகாரத்தில் 2 சிறுவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரம் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராகுல் (வயது 17). அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் விஷால் (17). இவர்கள் 2 பேரும் பூக்கடையில் பூக்கட்டும் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். தீபாவளி அன்று இரவு ராகுலும், விஷாலும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியை அடுத்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே வாய்க்கால் கரையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது பற்றி சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்ரே பிரவீன் உமேஷ் விசாரணை நடத்தினார்.
கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் கொலையாளிகளின் அடையாளம் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவத்தில் மொத்தம் 7 பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட 2 சிறுவர்களில் ஒரு சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை கொலையாளிகளில் ஒருவரும் காதலித்ததாக தெரிகிறது. ஒரே பெண்ணுக்கு 2 பேருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 3 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. காதல் விவகாரத்தில் 2 சிறுவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.