நேற்று வைகாசி மாதக் கிருத்திகை மற்றும் சர்வ அமாவாசையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதின.
இன்று கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்திருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திருச்செந்தூரில் திரண்டுள்ளனர்.
மேலும் சிலர் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் கோயிலுக்கு வந்துள்ளனர்.
விசேஷ நாட்களன்று காலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்ட போதிலும், கட்டண தரிசன வரிசைகளிலும், பொது தரிசன வழிகளிலும் சுமார் 6 மணி முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக வழக்கமாகத் தனி வரிசை அமைக்கப்படும். ஆனால் இன்று கோவில் நிர்வாகம் முறையான தனி வரிசை ஏற்பாடுகளைச் செய்யாத காரணத்தால் அனைவருமே நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையை தொடர்ந்து நீண்ட நேரமாகியும் சன்னதி கதவுகள் திறக்கப்படாததாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் ஆத்திரமடைந்த பக்தர்கள், சண்முக விலாச மண்டபம் முன்பு இருந்த தடுப்புக் கதவுகளை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும், நெரிசலும் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில், கொளுத்தும் வெயிலிலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோரும் பெரும் அவதி படுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சாதாரண மக்கள் வெயிலிலும் கூட்டத்திலும் வதங்கும்போது, வி.ஐ.பி-க்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட தம்பதியினரும் பிற பக்தர்களும் இந்து சமய அறநிலையத்துறைக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.