தமிழக செய்திகள்

திருச்செந்தூர் சூரசம்ஹார இசை கச்சேரியில் 'முருகப் பெருமானுடன் முதலமைச்சர் விஜயை ஒப்பிட்டுப் பாடவில்லை'- புஷ்பவனம் குப்புசாமி

வேலெடுத்துப் பகை முடித்த முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள், வெற்றி உண்டு வாருங்கள் என்றுதான் பாடியிருக்கிறேன்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழாவின்போது தான் பாடிய பாடல் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவரும், பிரபல நாட்டுப்புறப் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி வீடியோ மூலம் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்றுப் பாடிய புஷ்பவனம் குப்புசாமி, தனது பாடலில் தமிழக முதலமைச்சர் விஜயை முருகப் பெருமானோடு ஒப்பிட்டுப் பாடியதாகச் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக பாடல் வரிகள் அமைந்திருப்பதாகக் கூறி, இணையத்தில் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களும், வசைமொழிகளும் பதிவிடப்பட்டு வந்தன.

முருகனிடம் வேண்டினால் வெற்றி நிச்சயம்

இந்தச் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, புஷ்பவனம் குப்புசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, திருச்செந்தூரில் நடந்த இசைக் கச்சேரியில் நான் பாடிய பாடலைக் குறைசொல்லிப் பலரும் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் திட்டும் அளவுக்கு நான் தவறாக எதுவும் பாடவில்லை. என்னைப் பாராட்டுகின்ற உங்களுக்கு, என்னைத் திட்டுவதற்கும் முழு உரிமை உண்டு. இருப்பினும், எதற்காகத் திட்டுகிறோம் என்ற உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். நான் பாடிய பாடலில் எந்தவொரு குறையும் இல்லை.

ஒப்பீடு அல்ல, உதாரணமே

அந்தப் பாடலின் உண்மையான அர்த்தத்தை விளக்கிய அவர், நம் தமிழக முதலமைச்சர் எப்படி முருகனிடம் வேண்டிக்கொண்டு வெற்றி பெற்றாரோ, அதேபோல் வேல் எடுத்துப் பகை முடித்த முருகனிடம் நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்ற பொருளில்தான் பாடினேன். வேலெடுத்துப் பகை முடித்த முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள், வெற்றி உண்டு வாருங்கள் என்றுதான் பாடியிருக்கிறேன். இதில் முதலமைச்சரை ஒரு சாட்சியாகவும், உதாரணமாகவும்தான் குறிப்பிட்டுள்ளேனே தவிர, எங்கும் அவரை முருகப் பெருமானோடு ஒப்பிட்டுப் பாடவில்லை.

திட்டுவதை நிறுத்துங்கள்

மேலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய குப்புசாமி, முருகப் பெருமானைப் போற்றி நான் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியுள்ளேன். தமிழ் இலக்கியமும், இலக்கணமும் அறிந்த நான், பக்திப் பாடலில் இதுபோன்ற பிழையை ஒருபோதும் செய்வேனா? முருகப் பெருமானின் அருள் என்பது பேரருள்; அதற்கு நிகர் இவ்வுலகில் எதுவும் கிடையாது, அவருக்கு நிகர் யாருமில்லை. இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் யாரையும் கடவுளோடு ஒப்பிடவோ அல்லது யாரையும் குறை சொல்லவோ இல்லை. எனவே, பாடலின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, இனியும் என்னைத் திட்டுவதை நிறுத்துங்கள் என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT