தமிழக செய்திகள்

கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூரில் கண்டவர்களுக்கெல்லாம் அரோகரா முழக்கமா?- நயினார் நாகேந்திரன்

திருக்கோவில்களை ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக அரசு?

திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் முதலமைச்சருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என பாடகர் வேல்முருகன் முழக்கமிட்டதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திருக்கோவில்களை ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக அரசு?

எம்பெருமான் முருகன், சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற ‘சூரசம்ஹாரம்’ நிகழ்வின் போது, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற வரிசையில் ‘முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று கோஷமிட்ட பாடகர் வேல்முருகனுக்கு எனது கடும் கண்டனங்கள்!

கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்?

ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா?

எவ்வித ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.

கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட வேல்முருகன் அவர்கள், உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT