தமிழக செய்திகள்

திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

போராட்டம் காரணமாக மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுமுதல் (வியாழக்கிழமை) திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது.

டிப்பர் லாரிகள்

இதையடுத்து கவரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் டிப்பர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன. டிப்பர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாங்கள் டிப்பர் லாரிகள் மூலம் சவுடு, ஜல்லி, எம்-சாண்ட் விற்பனை தொழில் செய்து வருகிறோம். ஆந்திர மாநிலத்தில் இருந்து முறையாக உரிய அனுமதி பெற்று தொழில் செய்து வருகிறோம்.

கனிம வளத்துறை

ஆனால் மாவட்டத்தில் உள்ள கனிம வளத்துறை அதிகாரிகள், எங்களது முறையான தொழில் மீது பொய்யான வழக்குகளை போட்டு வாழ்வாதாரத்தை சீர் குலைத்து வருகின்றனர்.

இதனை கண்டித்து கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள காலி நிலத்தில் டிப்பர் லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டிப்பர் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே எங்களது நியாய மான கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.