மலைகிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடமலைக்குண்டு, வருசநாடு, கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த வியாபாரிகளும் பேரணி நடத்தினர். அப்பகுதிகளை சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தேனி மாவட்டம் கடமலைமயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, சிங்கராஜபுரம், நரியூத்து, பசுமலைதேறி, பூசனூத்து உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பட்டா இல்லாத குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வனத்தையும், விலங்குகளையும் பாதுகாத்து வருவதால் தங்களுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும், வனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும், இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து மீண்டும் மறு அளவீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக கடமலைக்குண்டுவில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தில் கடமலை, மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர். குழந்தைகள், முதியவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மலைகிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடமலைக்குண்டு, வருசநாடு, கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த வியாபாரிகளும் பேரணி நடத்தினர். இன்று அப்பகுதிகளை சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தேனீர் கடை, ஓட்டல்கள் என எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் ஊரடங்கு நாளில் காணப்பட்டதுபோல அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கட்டிட தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது கோர்ட்டு அளிக்கும் உத்தரவை பொறுத்து எங்களது அடுத்த கட்ட போராட்டம் இருக்கும் என தெரிவித்தனர்.