தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று, கூடுதல் நிவாரணத் தொகையாக ரூ.5.25 கோடியை உடனடியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை போக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிவாரணத் தொகையின் மூலம், போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு மீதமுள்ள தொகையாக தலா ரூ.25 லட்சமும், தீவிர துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் கொடுங்காயமடைந்து இன்னமும் சிரமப்பட்டு வரும் 40 நபர்களுக்கு மீதமுள்ள தொகையாக தலா ரூ.5 லட்சமும் கூடுதல் நிவாரண நிதியாக நேரடியாக வழங்கப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து முதல்வர் விஜய் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.