தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை

பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலமுருகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாலமுருகனின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலா என்ற பாலமுருகன் (வயது 45). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் அப்பகுதியில் மளிகை கடை மற்றும் காய்கறி கடை நடத்தி வந்தார்.

தகராறு

இந்நிலையில் இன்று அவரது உறவினர் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு, நேற்றிரவு வீட்டு அருகே சாலை ஓரமாக டிஜிட்டல் பேனர் கட்டி உள்ளனர் அப்போது அங்கு வந்த சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சோட்டையன் தோப்பு சேது பாதை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் பாலமுருகன் நின்று கொண்டிருந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் பால முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர், இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலமுருகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

உடனே அக்கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியது. இந்த கொலைச்சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் இன்று காலை காட்டுத்தீயாக பரவியதது. இதற்கிடையே சம்பவஇடத்தில் பாலமுருகன் குடும்பத்தினர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் திரண்டனர்.

உறவினர்கள் சாலை மறியல்

சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) குரு வெங்கட்ராஜ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாலமுருகனின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். இதையேற்று உறவினர்களின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

போலீசார்

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டி.ஐ. ஜி.திருநாவுக்கரசு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். இந்த கொலைக்கு முக்கிய பிரமுகர் ஒருவர் தூண்டுதலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தால் தூத்துக்குடியில் பதட்டம் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT