தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவரது மகன் காளிராஜ் (வயது 40).
இவர் திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இன்று அதிகாலை சந்தையில் உள்ள காய்கறி கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வரும் அஞ்சரம் பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவரது மகன் சின்னத்துரை (40), கோடாரியால் வெட்டிக் காளிராஜைப் படுகொலை செய்துவிட்டு, கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, கொப்பம்பட்டி போலீஸ் நிலைய போலீசார் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்த காளிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சின்னத்துரையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட காளிராஜ், சின்னத்துரையை அடிக்கடி உருவக்கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இதேபோன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, காளிராஜ் சின்னத்துரையை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே உருவக் கேலி செய்து வந்ததுடன், தினசரி சந்தையில் அனைவரின் முன்னிலையிலும் தன்னைக் கீழே தள்ளித் தாக்கியதை அவமானமாக கருதிய சின்னத்துரை, ஆத்திரத்தில் காளிராஜை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உருவக்கேலி மற்றும் தாக்குதல் ஆகியவைதான் கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட காளிராஜுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
விளையாட்டுத்தனமாகத் தொடங்கிய கிண்டல், கேலி பிரச்சினை கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.