விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேற வாய்ப்பு இல்லை. இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கல. துரோகம் பண்ணிட்டாங்க எனச் சொல்றாங்க., துரோகம் பண்ண என்ன இருக்கு. நாளைக்கு கூட நாம் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். அதைத்தான் நான் சொன்னேன். அதில் எங்களுக்கு அவ்வளவு பிடிப்பு இல்லை என்பதனால்தான் சொல்கிறேன். உடனே இருக்கிற இடத்தில் விசுவாசமா இரு இன்று இங்கே இருக்கிறவன் சொல்கிறான்.
நம்மல ஒரு அடிமையாகவே பார்க்கிறான். சுதந்திரமாக சிந்திக்கிற ஆளா பார்க்கல. இங்கு இருந்தா இங்கே விசுவாசமா இரு. அங்கே இருந்தா அங்கே விசுவாசமா இரு என்கிறார்கள். அதற்கு என்ன பொருள். நீ சுதந்திரமாக சிந்திக்கக் கூடாது. சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடாது என்பதுதான். இது என்ன போக்கு.
பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதை தக்கவைப்பதற்கான அணுகுமுறையைத்தானே எடுப்பார்கள். த.வெ.க.-வுக்கு ஆதரவு, அமைச்சர் பதவி. அப்படி என்றால் த.வெ.க. அரசை புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்போம். இப்படித்தானே சராசரி மனிதன் முடிவு எடுக்கனும். அதைத் தாண்டி பாஜக-வுக்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பார்வையை திருமாவளவன் முன் வைக்கிறான் என்றால், இந்த பார்வையை நீங்கள் பாராட்ட வேண்டாமா? வரவேற்க வேண்டாமா? ஒரு அட்டாச்சுடு இல்லாமல் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றால், திமுக-வில் மீண்டும் ஒட்டிக்கொள்ள நினைக்கிறான் என்கிறார்கள். திமுகவுடன் ஒட்டிக்கொள்ள தேவை என்ன வந்தது?. அர்த்தம் இல்லாத விமர்சனம் அது.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய விடுதலை சிறுத்தைகள் த.வெ.க. ஆட்சியில் பங்கேற்றதை திமுக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு திருமாவளவன் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்.