திருமாவளவன்
தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய பேரணியில் நடத்தப்பட்ட தடியடியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர்.

இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரி ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் 7½ கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்

கல்வித் துறையைச் சீரழிக்கும் மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை, கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும். போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும், மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.