லாரி மோதி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரியமாம்பட்டு பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி சென்ற வாகனங்கள் எதிர்திசையில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தியாகதுருகம் அருகே பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி லட்சுமி (வயது45), மற்றும் முனியன் மனைவி வள்ளியம்மாள் (65) ஆகிய 2 பேரும் தியாகதுருகத்தில் கூலி வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றனர்.
அப்போது பெரியமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற லாரி இவர்கள் மீது மோதியது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வள்ளியம்மாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும். மேலும் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஏற்கனவே இந்த பகுதியில் நீங்கள் கேட்ட இடத்தில் இணைப்பு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இணைப்பு சாலை அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி மாலை 4 மணிக்கு மேல் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் பொதுமக்கள் சாலையை கடக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் ஒரு சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தியதாக திண்டிவனம் அருகே உள்ள காட்டுசிவரியை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார்(34) மீது வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.