டெல்லியில் போராட வந்த பெண்களைத் தாக்கிய குண்டர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், தேசியக் கொடியுடன் சென்றோரை மத்திய அரசு குற்றவாளிகளாகக் கைது செய்வதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி நிர்வாகிகளைக் கைது செய்த மத்திய அரசைக் கண்டித்துள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், "தேசத்தின் நிலமெங்கும் ஜந்தர் மந்தராக மாறவேண்டிய நேரமிது" எனத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் பெரும் முறைக்கேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதற்குப் பொறுப்பான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலிலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டது.
தடையை மீறி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசியக் கொடியுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் மாணவர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சிஜேபி நிர்வாகிகளின் கைது நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது, வாக்குத் திருட்டைக் கண்டித்துப் போராட வந்த பெண்களின் உடைகளைக் கிழித்துத் தாக்கிய குண்டர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக, அந்த வலதுசாரி அமைப்பினர் அவர்களை மாலையிட்டு வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஜனநாயக முறைப்படி போராட ஜந்தர் மந்தருக்குத் தேசியக் கொடியுடன் சென்றவர்களையோ மோடி-ஷா அரசு குற்றவாளிகளாகக் கைது செய்கிறது. "தேசத்தின் நிலமெங்கும் ஜந்தர் மந்தராக மாறவேண்டிய நேரமிது" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.