தமிழக செய்திகள்

‘அரசியலமைப்பு இதுதான்; காங்கிரஸிடம் மாற்றுத் திட்டம் இல்லை’: நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

நாடாளுமன்றத்தில் தற்போது எங்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல் வலிமையை காப்பாற்றி உள்ளோம்.

நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா கூட்டணித் தலைவர்கள் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

தாங்களின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பதனையும் செய்தியாளர்களிடையே தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;

“சோனியா காந்தி, மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்தி, மம்தா, தோழர் பேபி, மூன்று மாநில முதல்வர்கள், பல அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாலை என்னை சந்தித்தனர். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கோரிக்கைகளை என்னிடம் வைத்தனர்.

நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டாலும், வேறு சில பிரச்சனைகள் குறித்துப் பேசினார்கள்.

நாங்களும் அதைக் கேட்டுக்கொண்டோம். எங்களின் நிலைப்பாடு என்பது, தற்போது கொண்டுவரப்படும் மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கு தற்போது இருக்கும் பாதுகாப்புக் கூட குறையும்.

2027-ல் அமையவுள்ள தொகுதி மறுவரையறை குழுவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படும். அதை யார் நினைத்தாலும் தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் நிலை அதுதான்.

அதை மாற்றுவதற்கான அரசியல் வலிமையோ, மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற வலிமையோ நம்மிடம் இல்லை. அதுமட்டுமில்லாமல், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில், அதற்கு பின் எடுத்த எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நடந்தாலும் தமிழ்நாடு பாதிக்கப்படும்.

தென்மாநிலங்கள் முழுவதும் பாதிக்கப்படும். தென்மாநில கட்சிகளுக்கு இது வாழ்வா? சாவா? போராட்டம். அதை தடுக்க இப்போது கொண்டுவரப்படும் மசோதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழியே இல்லை. காங்கிரஸிடம் இதற்கு மாற்று திட்டமும் இல்லை.

நாடாளுமன்றத்தில் தற்போது எங்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல் வலிமையை காப்பாற்றி உள்ளோம். இதில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க எந்த வாய்ப்பும் இல்லை. திமுக அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி.

அவர் தொடங்கி நான் வரை தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, மாநில உரிமைக்காக போராடுவோம், வெற்றிப் பெறுவோம்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்.,

“அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான்; முதலில் தமிழ்நாடுதான்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT