தமிழக செய்திகள்

“இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” - தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முழுமையாக சீர்கெட்டுவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

சபை நேரம் வீணடிக்கப்படுகிறது

சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி உடன் கேள்விநேரம் ஆரம்பிக்கிறது. பின்னர் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அவர்கள் பேச முற்படும்போது, ஆளுங்கட்சியினர் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அவர்கள்மீது சுமத்தி, இருதரப்பினரும் மாறி, மாறி அவை நேரத்தை வீண்டிக்கின்றனர்.

10 மணிநேரம் அவை நடக்கிறது என பெருமையாக பேசுகின்றனர். ஆனால், அதில் 3 மணிநேரம்தான் மக்களின் பிரச்னை பேசப்படுகிறது. மீதமிருக்கும் 7 மணிநேரம் ஆளும் கட்சியினராலும், எதிர்க்கட்சியினராலும் வீண்டிக்கப்படுகிறது.

மூன்றே அமைச்சர்கள்தான்

பலதுறைகள் இருந்தாலும், அனைத்து துறைகளுக்கும் பெரும்பாலும் மூன்று அமைச்சர்களே எழுந்து பதில் கூறுகின்றனர். மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. அந்தந்த துறையின் அமைச்சர்கள், அந்தந்த துறைக்கு பதில் சொல்லவேண்டும்.

கேள்விகளுக்கு பதிலே இல்லை

காவல்துறை, தீயணைப்புத்துறை முதலமைச்சருடையது. வியாழன்கிழமை இத்துறைகள்மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக தரப்பில் நான் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டேன்.

முதலமைச்சர் பதிலுரையின்போது எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

ஒரே பதில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், எப்போது என தெரிவிக்கவில்லை.

எஃப்கியூஎல் மோசடி

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் எஃப்.க்யூ.எல். மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். ரூ.1,000 கோடி மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு பேசினேன். ஆனால் இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.

இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவுகள் சரியாக செயல்படவில்லை. இதனை இந்த அரசு கண்காணிக்க வேண்டும்.

நீண்டகால குற்றங்கள்

பதிலுரையில் பேசிய முதலமைச்சர், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் சீண்டல்கள், போதைப்பொருள் குற்றங்கள் எல்லாம் நீண்டகாலமாக இருக்கும் குற்றங்கள், உடனே நிறுத்தமுடியாது என்கிறார்.

அது தவறு. ஒரு பொறுப்புடைய முதலமைச்சர்தான் அவர்கீழ் இருக்கும் காவல்துறையை வைத்து தடுக்கவேண்டும். அவரே இப்படி ஒரு பதிலை வழங்கினால், மக்கள் பிரச்னைகளை யாரிடம் சொல்லமுடியும்? இது ஒரு செயலிழந்த அரசாங்கம்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முழுமையாக சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்தநிலை தொடரக்கூடாது. அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

ஊழல்

இந்த ஆட்சி வந்த பிறகுதான் ஊழல் அதிகமாகி உள்ளது. அரசு அலுவலங்களில் நடக்கும் தவறுகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கட்டுபடுத்தப்படும். எல்லா ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது.

இவர்கள் ஆட்சியில் மட்டும்தான் செயல்படுவதுபோல் பேசுவது. அதற்கு ஒரு ரீல் போடுகிறார்கள். லஞ்சம் இல்லையென்றால், சோதனையின்போது பணம் எவ்வாறு கைப்பற்றப்படுகிறது?

இந்த ஆட்சியில் லஞ்சம் அதிகரித்துள்ளது. நகராட்சித்துறை முதலமைச்சரின்கீழ் உள்ளது. ஆனால் வேறு அமைச்சர் பதில் சொல்கிறார்? அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய அமைப்பு நகராட்சி அமைப்பு.

ஆனால் அத்துறை சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் இன்று சட்டப்பேரவையில் இவ்வளவு குற்றச்சாட்டுகள் அரசின்மீது. இனியாவது முதலமைச்சர் அவர் துறையை கண்காணிக்க வேண்டும். இது விவசாயிகளை காக்கும் அரசு கிடையாது.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT