கடனை அடைக்க மாணவனை கடத்தி பணம் பறிக்க கடந்த ஒரு ஆண்டாக திட்டமிட்டு அவருடன் நண்பனாக பழகி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் புவனேஷ், தேசிங்க ஆகியோர் உதவியுடன் மாணவனை காரில் கடத்தி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பெங்களூர் சென்றது தெரிய வந்தது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ் புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவா, விவசாயி. இவரது மகன் சஞ்சு (வயது17). இவர் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சஞ்சு ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக கடைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் சஞ்சு வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். இருப்பினும் சஞ்சு கிடைக்காததால் சிவா ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் மகன் காணவில்லை என்று புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இன்ஸ்பெக்டர் ஜீவனந்தா மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து காணாமல் போன மாணவனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மர்ம நபர் ஒருவர் சஞ்சு வீட்டிற்கு போன் செய்து சஞ்சுவை விடுவிக்க ரூ.50 லட்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காத பட்சத்தில் உங்கள் மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் செய்வதறியாத திகைத்தால் சிவா உடனடியாக இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். தொடர்ந்து, மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பேசியது தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூரு கே.ஆர். புரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரை சுற்றி வளைத்த போலீசார் கடத்தப்பட்ட மாணவன் சஞ்சுவை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் ஆலங்காயம் அடுத்த ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஷ், படகுப்பம் பகுதியை சேர்ந்த புவனேஷ், கோமுடேரி பகுதியை சேர்ந்த தேசிங் என்பதும், சஞ்சுவின் உறவினரான கோகுல் என்பவரின் நண்பர் ஹரிஷ் என்பது தெரியவந்தது.
ஹரிஷ்க்கு கடன் தொல்லை அதிகளவு இருந்ததால் கடனை அடைக்க மாணவனை கடத்தி பணம் பறிக்க கடந்த ஒரு ஆண்டாக திட்டமிட்டு அவருடன் நண்பனாக பழகி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கடந்த 19-ந் தேதி மாலை ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் புவனேஷ், தேசிங்க ஆகியோர் உதவியுடன் மாணவனை காரில் கடத்தி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பெங்களூர் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவன் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.