விருதுநகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி வெள்ளிமலை கிணற்றுத் தெருவில் வசித்து வந்தார். மேலும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வரும் பூக்கடையில் கணேசன் வேலை பார்த்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் தான் வேலை பார்த்த பூக்கடையில் இருந்து விலகி வேறொரு பூக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். இதனால், ஆத்திரமடைந்த பழைய பூக்கடை உரிமையாளர்கள் பலர் தங்களிடம் வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கேட்டு கணேசனிடம் தகராறு செய்தனர்.
மேலும் பணத்தைத் தராவிட்டால் போலீசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளி விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பூக்கடைக்குச் சென்ற கணேசனிடம் உரிமையாளர்கள் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர். உடனடியாக தங்களிடம் வாங்கிய முன் பணத்தை திருப்பு தருமாறும் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கணேசன், ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை அவர்களது பூக்கடைக்கு முன்பாக வைத்தே தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயுடன் அவர் அலறித்துடித்த படி அங்குமிங்குமாக ஓடினார். அடுத்த ஒருசில விநாடிகளில் கோவில் வாசல் அருகிலேயே உடல் கருகி விழுந்தார். இதை பார்த்து கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கண்ணுக்கு முன்பாக நடந்த தீக்குளிப்பு சம்பவத்தால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் கணேசன் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த கோவில் காவல் நிலைய போலீசார் படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோவில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பூக்கடை உரிமையாளர்கள் 2 பேரை தேடி வருகிறார். திருப்பரங்குன்றம் கோவில் வாசல் அருகே நடந்த இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பூக்கடை ஊழியர் பட்டப்பகலில் கோவில் முன்பு தீக்குளித்த நிலையில் உடலில் நெருப்புடன் அங்குமிங்கும் சாலையில் ஓடிய காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. இது பார்ப்போர் நெஞ்சங்களை பதற வைக்கிறது.