சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபம்
இதையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும். அங்குள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று முருக பக்தர்களும், இந்து அமைப்புகளும் போராடி வருகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு தீப தூணில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து தடை ஆணை பெற்றது. இதனால் கடந்த ஆண்டு தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
வழக்கமான இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனால் திருப்பரங்குன்றத்தில் கடந்தாண்டு பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீப திருநாளான நாளை (24-ந் தேதி) மட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜ.க., இந்து மக்கள் கட்சி மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
ஆனால் தி.மு.க., மற்றும் த.வெ.க. கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்காக பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மறுசீராய்வு மனுவை காரணம்காட்டி இந்த ஆண்டும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை தடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.