தமிழக செய்திகள்

நயினார் நாகேந்திரன் உள்பட 46 பேர் மீது வழக்கு - நெல்லை போலீசார் நடவடிக்கை

தச்சநல்லூர் சோதனை சாவடி அருகே நெல்லை மாநகர போலீசார் வழிமறித்தனர்.

தடை உத்தரவை மீறி மதுரைக்கு செல்ல முயன்றதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 46 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் திருக்கார்த்திகை நாளில் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்த நிலையில் தமிழக அரசு நேற்று மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.

இந்நிலையில் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தும், வீட்டுக்காவலிலும் சிறை வைத்தனர்.

இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலையில் நெல்லை பெருமாள்புரம் வீட்டில், காவலில் வைக்கப்பட்டார். பிற்பகலில் நயினார் நாகேந்திரன் வீட்டில் இருந்து தொண்டர்கள் புடை சூழ திருப்பரங்குன்றம் நோக்கி சென்ற நிலையில், அவர்களை தச்சநல்லூர் சோதனை சாவடி அருகே நெல்லை மாநகர போலீசார் வழிமறித்தனர்.

தொடர்ந்து போலீசாருடன் பா.ஜ.க. நிர்வாகிகள் வாக்குவாதம் செய்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தடை உத்தரவை மீறி மதுரைக்கு செல்ல முயன்றதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 46 பேர் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 170-ன் கீழ்(தடுப்பு கைது) வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT