தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வில் நிலவும் உள்கட்சி நெருக்கடி அதிர்ச்சி அளிக்கிறது- திருமாவளவன்

அ.தி.மு.க. ஒரு திராவிட இயக்கம் என்ற முறையில் அந்த கட்சி வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

தி.மு.க.தான்

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழக அரசுக்கு ரூ.13 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தான் பதில் சொல்ல வேண்டும், நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ஒரு மாத காலம் தமிழக வெற்றி கழகத்தினுடைய ஆட்சி எப்படி உள்ளது என்று கேட்கிறீர்கள். ஒரே மாதத்தில் ஆட்சி நிர்வாகம் குறித்து எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது. இப்போது அவர்கள் ஒரு கற்று கொள்ளக்கூடிய காலம். எனவே, ஒரு மாத கால ஆட்சி பற்றி மதிப்பீடு சொல்ல இயலாது.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை, இது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த பதவியை ராஜினாமா செய்கிற அளவுக்கு உள்ளே என்ன நெருக்கடி என்பது அவர்களுக்கு தான் தெரியும். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

அ.தி.மு.க. ஒரு திராவிட இயக்கம் என்ற முறையில் அந்த கட்சி வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காப்பாற்றிய அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருப்பதே நல்லது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் புதிய கட்சி ஆரம்பித்து திருச்சி கிழக்கு தொகுதியில் போ ட்டியிட போகிறார் என வெளியாகி உள்ள செய்தியில் உள்நோக்கம் உள்ளது. அது தவறான தகவல் அவர் தலைமையோடு தொடர்பில் இருக்கிறார். வெளிநாடு சென்று தற்போது திரும்பி இருக்கிறார். விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

வன்னிஅரசு அமைச்சரான போதும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பதவி ஏற்கும் பொழுது அவர் தாமதமாக வந்த நிலையில், அவருடைய வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது தான் உண்மை. விடுதலை சிறுத்தைகள் கட்சி எளிய மக்களுக்கான இயக்கம்.

இந்த இயக்கத்தை உடைத்து இங்கே என்ன சாதிக்க போகிறார்கள், ஏன் இப்படி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை, எந்த பிரச்சனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.