தமிழகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் மறுபரிசீலனை செய்வதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திருமாவளவன் அசோக்நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் இரு தினங்கள் உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினராக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இன்னும் 3 ஆண்டுகள் மீதமுள்ளன.
சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன். 2026-ல் பேரவைக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என நினைத்தேன், அவ்வளவுதான்.
பாஜகவும் அதிமுகவும் சமூகநீதி அரசியலை சீர்குலைக்கும் செயலில் ஈடுபடுவதால் பேரவைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.
கூட்டணியில் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதால் ஆட்சியில் பங்கு கோரிக்கை வைக்கவில்லை.
புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
பதவி மீது எனக்கு ஆசையில்லை. திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன் என தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் ஏற்கனவே சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.