பதவிக்காகவோ, பரிசுக்காகவோ, அதிகார வேட்கைக்காகவோ அணி மாறவில்லை. அப்படி அந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அது உறுதி. எவன் என்ன சொன்னாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கத்தில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். தொடர்ந்து, இலக்கிய விருதுகள் பெற்றவர்களுக்கு திருமாவளவன் விருதுகளை வழங்கி, பேசியதாவது:-
எத்தனை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் பெற்றிருக்கிறோம் என்பது வலிமையின் அடையாளம் அல்ல. எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம் என்பதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
வி.சி.க.வின் இருப்பு தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவைப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியலில் நாம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பல அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கூட்டணி கணக்குகளை மாற்றியிருக்கிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சனாதன எதிர்ப்பு தமிழ்நாட்டில் வலுத்துள்ளது. இது வி.சி.க.வின் அரசியலால் நிகழ்ந்த விளைச்சல். பா.ஜனதாவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காததற்கு வி.சி.க.வின் பங்களிப்பு இருக்கிறது. அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளை சமரசம் இல்லாமல், மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது வி.சி.க..
தேர்தல் அரசியலில் எடுக்கும் நிலைப்பாடை வைத்து ஒரு இயக்கத்தை தீர்மானித்து விடக்கூடாது.
பதவிக்காகவோ, பரிசுக்காகவோ, அதிகார வேட்கைக்காகவோ அணி மாறவில்லை. அப்படி அந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அது உறுதி. எவன் என்ன சொன்னாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் இருக்கிறது.
தி.மு.க. அணியை விட்டு வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை பலர் தேடுகிறார்கள். அமைச்சர் பதவிக்காக நாங்கள் இந்த அணிக்கு வரவில்லை. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் மட்டுமல்ல, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் நீடிக்கவில்லை. இதற்கு யார் பொறுப்பு, காரணம் என சான்றோர்கள் மீளாய்வு செய்யட்டும்.
நாம் த.வெ.க. அணியில் இடம்பெறாமல் போய் இருந்தால், த.வெ.க.வை வலதுசாரிகள் ஆக்கிரமிப்பதற்கான சூழல் இருந்தது. த.வெ.க. அதற்கு தயாராக இல்லை. த.வெ.க.வை அப்படி விட்டுவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு வி.சி.க. இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும். உண்மை அதுதான்.
த.வெ.க. வெற்றி பெற்று விடக்கூடாது என்று நாம் பிரசாரம் கூட செய்தோம். நாம் இருக்கும் அணி வெற்றி பெற வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நாம் கருதினோம். 2026-ல் நம்முடைய கனவு நனவாகிற போது.., கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது விசிக-வின் கனவுகளில் ஒன்று.
தேர்தலுக்கு முன்பே தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என நான் வியூகம் செய்தேன். தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் நான் சட்டசபையில் இருப்பது நல்லது. தமிழ்நாடு அரசியலில் இன்னும் தீவிரமாக செயல்படும் கனவோடு இருந்தேன்.
காலம் வேறு கணக்குகளை போட்டு, நம் கனவை நினைவாக்கி, கூட்டணி அரசை அமைத்தது. இனி கூட்டணி ஆட்சி முறைதான் தமிழ்நாட்டில் நீடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.