தி.மு.க. நடத்திய போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும அவர் கூறினார்.
சிவகாசியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, "மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால், தி.மு.க. போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இது த.வெ.க.விற்கு எதிரான கருத்து என்பதைவிட, தி.மு.க.வுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும்.
நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் தி.மு.க.வின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.
த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர்.
இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்றார்.