நம்பியாறு 
தமிழக செய்திகள்

திருக்குறுங்குடியில் சாரல் மழை- நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு

திருக்குறுங்குடி வனத்துறையினரும், போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மழை

திருக்குறுங்குடி பகுதியில் நேற்று மதியம் திடீரென கனமழை பெய்தது. 1½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையினால் நம்பியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது.

போக்குவரத்து தடை

இதனைதொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. திருக்குறுங்குடி வனத்துறையினரும், போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்குறுங்குடி வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

ஏற்கனவே திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்லவும், வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவும் கடந்த 4-ந்தேதி முதல் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் நேற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் சிக்காமல் தப்பினர்.

திருக்குறுங்குடி வனப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சப்பாத்து பாலம் அருகில் நம்பியாற்றில் குளித்து வருகின்றனர்.

சாரல் மழை பெய்து வருவதால் நம்பியாற்றில் திடீர், திடீரென நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் சப்பாத்து நம்பியாற்றில் குளிக்க ஆற்றில் இறங்க வேண்டாம் என்று வனசரகர் யோகேஸ்வரன் கேட்டு கொண்டுள்ளார்.