காயம் அடைந்த பக்தர்களை கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கோவில் காவல் நிலைய போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புனித தலமாக விளங்கி வருகிறது.
இங்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனனர். வழக்கமாக இக்கடலானது அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள் வாங்குவதும் சில நேரங்களில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பு பவுர்ணமி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடல் திடீரென சுமார் 150 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இன்று காலையில் கடலில் புனித நீராடிய பண்ருட்டியை சேர்ந்த சரோஜா(42), காங்கேயத்தை சேர்ந்த குணசேகரன் (45), பெண் பக்தர் திருச்சியை சேர்ந்த இலஞ்சியம்(55), புதுக்கோட்டை ராஜகுமாரி (52), மூதாட்டி கிருஷ்ண வேணி (75) என 5 பேர் அதிகாலை 3 மணியளவில் கடலில் புனித நீராடிய போது கடல் அலையின் சீற்றத்தால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனே காயம் அடைந்த பக்தர்களை கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கோவில் காவல் நிலைய போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பக்தர்களை பாதுகாப்பாக புனித நீராட அறிவுறுத்தி வருகின்றனர்.