தமிழக செய்திகள்

சட்ட மன்றமா? சண்டை மன்றமா? ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அவை சுமூகமாக செல்கிறது - பிரேமலதா ஆவேசம்!

இதுவரை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் காலக்கட்டத்திற்கு ஏற்ப ஆட்சியை சிறப்பாகத்தான் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளுக்கு நாள் தவெக - திமுக வார்த்தை போர் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த்.,

“மக்கள் பிரச்னைகளை பேசுவதற்குதான் சட்டசபை. கருத்துகளை ஒரு 5 நிமிடம் பகிரலாம். ஆனால் மாலை 6.30 மணிவரை ஒருவரை ஒருவர் குறை சொல்வது, சண்டை போடுவதுதான் நடக்கிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னப் பலன்?

இதுவரை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் காலக்கட்டத்திற்கு ஏற்ப ஆட்சியை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மக்களும், நாங்களும் துணைநிற்போம்.

இரவு முழுவதும் பேசவேண்டியவற்றை தயார் செய்துவருகிறோம். ஆனால் எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. எப்போது பார்த்தாலும் சட்டமன்றத்தில் சண்டை, சண்டை, சண்டை. மக்களுக்கு இதனால் என்னப் பயன்?

இங்கு மக்களுக்காக பேசவேண்டும். அவர்களுக்காகத்தான் இந்த சட்டமன்றம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நேற்று முன்தினம் 2 மானியக் கோரிக்கை குறித்துக்கூட பேசமுடியவில்லை.

பேசியவர்களேதான் பேசுகிறார்கள். இது சட்டமன்றம், சண்டை மன்றம் அல்ல. ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அமைதியாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தால் சண்டை ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கக்கூடாது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி அளிக்கவேண்டும்.” என தெரிவித்தார்.