சையத் பாருக் பாஷா  
தமிழக செய்திகள்

"கோடிக்கணககில் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக கூறினார்கள்" - ஐ.யு.எம்.எல் எம்.எல்.ஏ பேச்சு வைரல்

எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைவர் கேட்டுள்ளார்.

“தேர்தலுக்கு பின்னர் கோடிக்கணக்கான பணத்துடன் அமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள்' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. சையத் பாருக் பாஷா பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. சையத்பாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "யாரிடமும் இணைந்து ஏமாந்தது போதும். இனி யாரிடமும் ஏமாற தயாராக இல்லை.

சட்டமன்றத்தில் சோபா மாடல் அரசு என்று விமர்சனம் செய்து வருகின்றனர். என்னையும், ஷாஜகானையும் சந்தித்து கோடி, கோடியாக பணத்தை எடுத்து வந்து எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொன்னார்கள்.

விரட்டி விட்டோம்

நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல, கொள்கைக்கு சாய்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையோடு தான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் கூட்டணிக்கு பின் ஷாஜகானுக்கு தற்போது பூங்கொத்து கொடுத்து அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைவர் கேட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான ஒரு பதவி வழங்கப்பட உள்ளது.

தி.மு.க. முயற்சி

கடை கோடியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளையும் நாங்கள் எம்.எல்.ஏ.வும், அமைச்சராகவும் தான் பார்ப்பேன். உங்களால் தான் நான் எம்.எல்.ஏ.வாக ஆகி உள்ளேன். மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும் மொழியால் தமிழனாகவும் இனத்தால் இந்தியனாகவும் இருக்கிறோம்.

அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பதற்காக தி.மு.க. முயற்சி செய்து எங்களை ஆதரிக்க சொன்னதால் எங்களுக்கு அந்த கொள்கை ஏற்றுக்கொள்ளாமல் அந்த தருணத்திற்காக தான் நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. த.வெ.க. தானாக முன்வந்து கொள்கைக்காக எங்களை ஆதரித்து உள்ளது. ஆகவே ஆட்சியில் பங்கு தருகிறோம் என தானாக முன்வந்து அமைச்சர் பதவியை வழங்கினார்கள்." என பேசியுள்ளார்.

அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT