தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வழக்கு விசாரணை எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்தார்.
“11.03.2026, சம்பவம் நடந்த அன்றே பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் 4 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்ஸ் உட்பட 150 காவலர்கள் இருந்தனர். இவர்கள் இல்லாமல், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி, தெற்கு சரக ஐஜி ஆகியோர் மூன்று நாட்கள் தூத்துக்குடியில் தங்கி விசாரணைக்கு வழிகாட்டினர்.
திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் சம்பவம் நடந்த நாளில் இருந்து தினமும் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு சென்று விசாரணைக்கு ஆதரவாக இருந்தார்.
இந்த சம்பவத்தில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் வெவ்வேறு கோணங்களில் விசாரணை தொடரப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆராய தனியாக தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தை சுற்றியிருந்த 98 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. டவர் டம்ப் அனாலிசிஸிஸ், 2574 மொபைல் எண்களின் தரவுகள் ஆராயப்பட்டன.
இதுமட்டுமில்லாமல் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள், குற்றப் பிண்ணனி கொண்டவர்களை விசாரிக்க நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் 461 குற்றவாளிகளை குற்றத்தில் ஈடுபடவில்லை என நீக்கினோம். வேடநத்தம் கிராமத்தில் இருந்த 800 ஆண்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கென தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இவ்வளவு விசாரணைக்கு பின்புதான் இந்த நபரை கைது செய்துள்ளோம். அனைத்து நிலை காவலர்களும் இந்த வழக்கில் கடினப்பட்டு வேலை செய்தனர்.
இது மட்டுமில்லாமல் சிறுமியின் புகைப்படம், விவரங்களை பகிர்ந்தது தொடர்பாக 6 எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உயர் நீதிமன்றம் வழக்கை நேரடியாக பார்வையிட்டு வருகிறது.” என தெரிவித்தார்.
வழக்கு விசாரணையில் இருப்பதால் மற்ற தகவல்கள் எதையும் பகிரமுடியாது எனவும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.