திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வெங்காய இருப்பை உறுதி செய்துள்ளனர்.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (நேபெட்) மாநில தலைமை அதிகாரி பிரகாஷராவ் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு வந்தார்.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின் படி பண்டிகை காலங்களில் வெங்காய விலை உயர்வை தடுக்க நாசிக்கில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், சில்லரை விலை ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையான கிலோ ரூ.35க்கு நேபெட் மூலம் வினியோகிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1400 மெட்ரிக் டன் வெங்காயம் மாநில கூட்டுறவு அங்காடி மூலம் மக்களுக்கு ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தை விலை ரூ.50க்கும் மேல் நீடித்ததால் 3ம் கட்டமாக மேலும் 400 மெட்ரிக் டன் வெங்காயம் நாசிக்கில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
வெங்காயம் அழுகக்கூடிய பொருள் என்பதால் 10 முதல் 15 சதவீதம் வரை கையாளுதல் இழப்பு அனுமதிக்கப்படும். கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முந்தைய வெங்காயங்களை விட தரம் குறைவாக இருப்பதாக கூறி சரக்கை எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தனர். இதற்கு தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு முன் பணமும் பெறவில்லை. அங்காடிகள் மூலம் விற்று முடிந்த பின்னரே பணம் பெறப்பட்டது. தற்போது நிராகரிக்கப்ட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயத்திற்கு மாநில அரசோ அல்லது கூட்டுறவு அங்காடிகளோ எந்த முன் பணமும் செலுத்தவில்லை என்பதால் தமிழக அரசுக்கு இழப்பு இல்லை.
கூட்டுறவுத்துறை நிராகரித்ததை தொடர்ந்து அரசு வழிகாட்டுதலின் படி 400 டன் வெங்காயம் நேபெட் மூலமாகவே வெளிப்படையான முறையில் சந்தைப்படுத்தப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடமாடும் வாகனங்கள், மின்னணு ஏலம் வாயிலாக இவை விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு 4 லாரிகளில் கொண்டு வரப்பட்ட வெங்காயங்கள் ஒரு குடோனில் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டு திறந்த வெளி சந்தையில் ஏலத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளன. அதிகாரிகள் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வெங்காய இருப்பை உறுதி செய்துள்ளனர். சரக்குகள் எதுவும் காணாமல் போனதில்லை. ஏல பட்டியலில் அனைத்து விவரங்களும் வெளிப்படையாகவே திறன் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.